The Two Men Inside a Man

இந்த கதை என்னுடைய கதை அல்ல, சிறுவயதில் “Solidaire” தொலைக்காட்சி பெட்டியில், “DD1” ஒளிபரப்பிய பொழுது பார்த்தது. யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. இந்த வலைதலம்தான் செவிசாய்த்தது.

ராமசாமி தன் ஆடு இரண்டையும் அரமனசா ஒட்டிகிட்டு வந்தார். இருக்குற ஆட்டையும் வித்துட்டு என்ன பண்றது? வைகாசி வந்திருச்சு. காட்டு வேலை இருக்கும், தெனமும் கூலிக்கு போன ஒரு மூனு மாசத்துல எப்படியும் ஒரு ரண்டு குட்டிக்கு காசு சேத்திரலாம். பேசாம இப்ப ஒன்ன மட்டும் வித்துருவோமா?…. இப்படி ஆயிரம் யோசன மனசுக்குள்ள ஓடிகிட்டு இருக்கும் போதே, “சீக்கிரம் வாப்பா, நாம போய் சேர்ரதுக்குள்ள சந்தையே முடிஞ்சுருமாட்ட இருக்குது”ன்னு பெரியசாமி கத்தரது கேட்டுது. தலையத்தூக்கி பெரியசாமி பக்கம் ஒரு ஆட்டு ஆட்டீடு, இழுத்து எட்டி வெச்சார்.

இன்னும் கொஞ்சம் சாவகாசமா வந்திருந்தா, பெரியசாமி சொன்ன மாதிரி சந்தை முடிஞ்சுதான் போயிருக்கும் போல. இப்பவே ஆளாலுக்கு வாங்குனத இழுத்துகிட்டு போய்க்கிட்டு இருந்தாங்க.

“என்னபா, சந்தைக்கு வங்கவா வாரோம்? பொருளக் கொண்டாறோம் சீக்கிரம் வந்திருக்கனும், பாரு எல்லாம் இப்பவே நடையக்கட்ட ஆரம்பிச்சுட்டாங்க”, பெரியசாமி நொந்துகொண்டு திரும்பி பாத்தார். ராமசாமியின் கவனம் முழுக்க ஆட்டின் மேலேயெ இருந்தது.

“இந்தாப்பா ராமசாமி, தேவைன்னா வித்துதாம்பா ஆவனும். ஆடுதான? நாலு மாசம் போவட்டும் இதே சந்தைல வங்கிக்கலாம். ஆட்டப் பாத்துகிட்டு இங்கையே நில்லு, நா போயி ஆள் யாராவது சிக்குனா கூட்டியாறேன்.” சொல்லீட்டு பொரியசாமி நவுந்தார். ராமசாமி மனசுல இப்ப ரண்டாயிரம் யோசன.

பெரியசாமி ஆளோட திரும்பி வந்தப்ப, ராமசாமி ஒரு ஆட்டோட தலைப்புடிச்சு, கண்ணப்பாத்துகிட்டு இருந்தார்.”ராமசாமி, இவுரு ஆடு புடிக்கத்தான் வந்திருகாறாம், ரெண்டு பெரும் பேசி முடிவு பண்ணுங்க”. “நாம்பேசர மாதிரி இருந்தா உங்கள ஏங்க இழுத்துகிட்டு வர்றேன்? நீங்களே பேசுங்க.” வாங்க வந்தவர் ஆட்ட புடிச்சு பல்ல பாத்தார், கால மடக்கிப் பாத்தார், அப்புறம் எந்திருச்சு “சரிங்க பேசலாம்ன்னார்”

வாங்க வந்தவரும், பெரியசாமியும் கொஞ்சம் தள்ளி போயி துண்டுக்கு அடீல கையவிட்டு, பேரம் பேசுனாங்க. ஒரு கட்டத்துல, வாங்க வந்தவர், “ஐயா பொண்டட்டி தாலிய வெச்சு காசு கொண்டாந்திருக்கேன், இதுக்கு மேல முடியாதுங்கா” அப்பிடின்னது கேட்டுது. பெரியசாமி திரும்பி வந்து, “ராமசாமி, இவ்வளவுதான் இருக்காம் என்னப்பா உனக்கு சரியா? குடுத்துரலாமா?” “அண்ணே, ஒரு சின்ன சிக்கல். ஆடு வர்ற வழில வெசச்செடிய மேஞ்சிருச்சு. ராத்திரி அசப்போட்டுதுன்னா செத்தாலும் செத்துரும். அதான் … விக்க வேண்டாம்னு …”ன்னு இழுத்தார். பெரியசாமி அதுக்கு மேல அங்க நிக்குல. ஆட்ட, வாங்க வந்தவன்கிட்ட ஓட்டி உட்டுட்டு, காச வாங்கி ராமசாமி சுருக்குப்பைல துணுச்சுட்டு, ராமசாமிய தள்ளாத கொறயா கூட்டிகிட்டு ஊட்டப்பாக்க நடைக்கட்டீட்டார்.

இந்த ஒளி(லி)நாடா முடிந்ததும் திரையில் பெரிதாய் ஒரு பத்தி எழுதி slide போட்டிருந்தார்கள் – அதில் எனக்கு நியாபகம் இருப்பது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு ராமசாமியும், ஒரு பெரியசாமியும் இருக்கிறார்கள்.